பருத்தி

புள்ளிகளையுடைய காய்ப்புழு

Earias vittella

பூச்சி

சுருக்கமாக

  • பூப்பதற்கு முன் முனைத் தளிர்கள் வாடிப்போகுதல்.
  • அரும்புகள் மற்றும் காய்கள் உதிர்தல்.
  • காய்களில் துளைகள் ஏற்பட்டு, உட்புறமாக அழுகுதல்.
  • பருத்திக் காய்கள் படிப்படியாக வெறுமையாகுதல்.

இதிலும் கூடக் காணப்படும்


பருத்தி

அறிகுறிகள்

முட்டைப்புழுக்கள் முக்கியமாக காய்களைத் தாக்கும், ஆனால் காய் இல்லையென்றால் அரும்புகள், தளிர்கள் மற்றும் மலர்களையும் இவை உண்ணும். வளர்ச்சி நிலையின்போது நோய்த்தாக்கம் ஏற்பட்டால், கம்பளிப்புழுக்கள் தளிர்களின் முனை மொட்டுகள் வழியாக ஊட்டம் பெற்று, கீழ்நோக்கி நகரும். இது பூப்பதற்கு முன் முனைத் தளிர்களை உலரச்செய்கிறது மற்றும் உதிரச்செய்கிறது. முக்கியத் தண்டு பாதிக்கப்பட்டால், முழுத் தாவரமும் சாய்ந்துவிடக்கூடும். பிந்தைய நிலையில் தாக்கப்பட்டால், முட்டைப்புழுக்கள் அடிப்பகுதியைச் சுற்றிலும் ஏற்படுத்திய துளைகள் வழியாக நுழைந்து மலர் மொட்டுகள் மற்றும் காய்களை உண்ணும். சேதமடைந்த பூ மொட்டுகள் சில நேரங்களில் முன்கூட்டியே படர்ந்து, இதன் விளைவாக 'விரிந்த அரும்புகள்' என்று அழைக்கப்படும் அறிகுறிகள் ஏற்படுகிறது. தாவரத் திசுக்களுக்கு ஏற்படும் சேதம் மற்றும் கழிவுகளின் இருப்பு பூஞ்சை அல்லது பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது, இது அறிகுறிகளை இன்னும் மோசமாக்குகிறது. தாவரம் இளமையாக இருக்கும்போது தாக்கப்பட்டால், இந்த நோய்ப்பூச்சி அதிக சேதத்தை ஏற்படுத்தும். பிறவற்றுக்கு மத்தியில், செம்பருத்தி மற்றும் வெண்டைக்காய் பயிர்கள் இந்த நோய்ப்பூச்சியின் மாற்றுப் புரவலன்கள் ஆகும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இந்த நோய்ப்பூச்சியைச் சமாளிப்பதற்கு முட்டைகள் அல்லது இளம் முட்டைப்புழுக்களைக் கண்டறிந்து, அப்புறப்படுத்துவது மிகவும் முக்கியமாகும். பிராகோனிடே, சிலியோனிடே மற்றும் டிரைக்கோகிராம்மாடிடே இனத்தின் சில ஒட்டுண்ணிப் பூச்சிகளை உயிரியல் கட்டுப்பாட்டு வழிமுறையாகப் பயன்படுத்தலாம். பின்வரும் வரிசைகளில் இரைப்பிடித்துண்ணி பூச்சிகளை முயற்சி செய்க: கோலியோப்டெரா, ஹைமெனோப்டெரா, ஹெமிப்டெரா மற்றும் நியூரோப்டெரா. இந்த இனங்களை ஊக்குவிப்பதை (அல்லது வயலில் இவற்றை அறிமுகப்படுத்தவும்) உறுதிசெய்யவும் மற்றும் பரந்த அளவிலான பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைத் தவிர்க்கவும். நீங்கள் பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, பேசில்லஸ் துரிஞ்ஜியென்சிஸ் என்பவற்றைக் கொண்டிருக்கும் உயிரியல் பூச்சிக்கொல்லித் தெளிப்பான்களைப் பயன்படுத்தலாம். வேப்ப விதைச் சாறு (NSKE) 5% அல்லது வேப்ப எண்ணெய் (1500 பிபிஎம்) @ 5 மிலி/லி என்ற கணக்கில் தெளிக்கவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். பூப்பூக்கும் ஆரம்ப நிலையில், 100 செடிகளுக்கு 10 முட்டைகள் அல்லது ஐந்து சிறிய புழுக்கள் தென்பட்டால், சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. வளரும்போது, முட்டைப்புழுக்கள் பூச்சிக்கொல்லி சிகிச்சைக்கு எதிரான சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வது அதிகரிப்பதால், முட்டைகள் மற்றும் இளம் முட்டைப்புழுக்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்துவது முக்கியம். முட்டையாக இருக்கும் நிலையில் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. குளோரன்டிரானிலிப்ரோல், எமாமெக்டின் பென்சோயேட், ஃப்ளுபென்டையமைட், மெத்தோமில் அல்லது எஸ்ஃபென்வலேரெட் ஆகியவற்றைக் கொண்ட பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம். குறைந்த விலைப் பயிர்களுக்கு இரசாயண சிகிச்சை சாத்தியமில்லாமல் போகக்கூடும்.

இது எதனால் ஏற்படுகிறது

சேதங்களானது ஈரியாஸ் விட்டெல்லா என்னும் புள்ளிகளையுடைய காய்ப்புழுவின் முட்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இது இந்தியாவின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு பொதுவான பூச்சியாகும். அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் வெளிர் நிறத்தில், பச்சை நிறத் தோற்றத்துடன், சுமார் 2 செ.மீ நீளத்தில், மலர்கள் அல்லது ஒளி மூலங்களுக்கு அருகில் காணப்படும். முன் இறக்கைகள் வெளிர் நிறத்தில் பிராகாசமான கோடுகளை/வரிகளைக் கொண்டிருக்கும். இவற்றின் பின் இறக்கைகள் மென்மையான வெள்ளை நிறத்தில் வெளிர் பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தால் மூடப்பட்டிருக்கும். முட்டைகளானது நீல நிறத்தில், இளம் தளிர்கள், இலைகள் மற்றும் அரும்புகள் மீது ஒற்றையாக இடப்படும். இளம் முட்டைப்புழுக்கள் வெளிர் பழுப்பு நிறத்தில் சாம்பல் முதல் பச்சை நிறத் தோற்றத்துடன் காணப்படும். மேலும் அதன் நடுப்பகுதி அடிப்புற வரிகள் நெடுகிலும் வெளிர் நிறமாக இருக்கும். முழுமையாக வளர்ச்சி அடைந்த முட்டைப்புழுக்கள் 1.8 செ.மீ நீளம் வரை இருக்கும். கை பூதக்கண்ணாடி வழியே பார்க்கும்போது சிறிய முட்கள் காணப்படும். இது உடலின் பெரும்பாலான பகுதியை மூடியிருக்கும். இவை முதிர்ச்சி அடைந்தவுடன், இவை இலைகள் அல்லது உதிர்ந்த தாவர பாகங்களில் ஒட்டியிருக்கும் பட்டால் ஆன கூட்டில் கூட்டுப்புழுக்களாகும். வெப்ப மண்டல நிலைமைகளின் கீழ், ஒரு தலைமுறை 20-25 நாட்களுக்குள் முழுமையடைகிறது. குறைவான வெப்பநிலை இரண்டு மாதங்கள் வரை இந்த செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும்.


தடுப்பு முறைகள்

  • உங்கள் பகுதியில் கிடைக்கப்பெற்றால், சகிப்புத்தன்மை கொண்ட வகைகளை நடவு செய்யவும்.
  • பூச்சியின் உச்சக்கட்ட எண்ணிக்கையைத் தவிர்க்க, சீக்கிரமே நடவு செய்வதை உறுதி செய்துகொள்ளவும்.
  • தாவரங்களுக்கு இடையில் போதுமான இடைவெளி விடவும்.
  • பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியைத் தகர்க்க சாகுபடி செய்யப்படாத பகுதிகளைத் தேர்வு செய்யவும்.
  • செம்பருத்தி மற்றும் வெண்டைக்காய் போன்ற கவர்ச்சிப்பயிர்களை நடவு செய்யவும்.
  • ஒற்றைப்பயிர் செய்யும் முறையைத் தவிர்த்து, நன்மை பயக்கும் தாவரங்களைக் கொண்டு ஊடுபயிர் செய்யவும்.
  • புள்ளிகளையுடைய காய்ப்புழுவின் முட்டைப்புழுக்கள் மற்றும் முட்டைகள் ஏதேனும் தென்படுகிறதா என பருத்தி வயலைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.
  • போதுமான அளவு உரங்களை இடவும்.
  • சீக்கிரமே அறுவடை செய்வதற்கான நடைமுறைப் பயிற்சிகளைப் பின்பற்றவும்.
  • ஒவ்வொரு பயிர்ச் சுழற்சிக்குப் பின்னரும் அறுவடைக் குப்பைகள் அனைத்தையும் சுத்தப்படுத்தவும்.
  • இரைப் பிடித்துண்ணிகளுக்கும் மற்றும் பிறவற்றுக்கும் கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்த மண்ணை ஆழமாக உழவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க