Aceria litchii
சிலந்திப்பேன்
இளம் மரங்களும் புதிய தளிர்களும் இந்தப் பூச்சியால் எளிதில் பாதிக்கப்படும். நோய்ப்பூச்சித் தாக்குதலின் ஆரம்ப அறிகுறிகள், இளம் இலைகள் மற்றும் தளிர்களில் சிறிய கொப்புளங்கள் தோன்றுவதன் மூலம் வெளிப்படும். கொப்புளங்களில் வெள்ளி-வெள்ளை நிற முடிகள் (எரினியா) தோன்றும். இலைகளின் அடிப்பகுதியில் மிகச்சிறிய வெண்மையான பூச்சிகள் அரிதாகவே தெரியும். நோய்ப்பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும்போது, கொப்புளங்கள் செம்பழுப்பு நிறமாக மாறி, தடிமனாகவும் வெல்வெட் போலவும் ஆகும். இலைகள் கடுமையாகச் சிதைந்து சுருண்டுவிடும். சிறிய குழிகள் கடினமான பாதுகாப்பு கட்டிகளாக உருவாகும். பாதிக்கப்பட்ட இலைகள் காய்ந்து மரத்திலிருந்து உதிர்ந்துவிடும். இலைக்காம்புகள், தண்டுகள் மற்றும் பூ மொட்டுகளிலும் அறிகுறிகள் தோன்றலாம்.
உயிரியல் கட்டுப்பாட்டு முறைகளை சாகுபடி முறைகளுடன் இணைத்துப் பயன்படுத்துங்கள். தேவைப்படும்போது மட்டும் குறிப்பிட்ட இடங்களில் இரசாயன சிகிச்சைகளைப் பயன்படுத்துங்கள். நன்மை தரும் பூச்சிகள் சிலந்திப்பேன் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உதவும். லிச்சிப் பழத் தோட்டங்களைச் சுற்றிப் பல்வகைத் தாவரங்கள் நிறைந்த சூழலைப் பராமரியுங்கள். இயற்கை எதிரிகளுக்குத் தீங்கு விளைவிக்காத, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் செயல்படும் சிலந்திக்கொல்லிகளைப் பயன்படுத்துங்கள். நன்மை தரும் சிலந்திப்பேன்களின் எண்ணிக்கையைத் தவறாமல் கண்காணிக்கவும்.
முதல் பாதிப்பு கண்டறியப்பட்டவுடன் தெளிப்பை மேற்கொள்ளவும். புதிய வளர்ச்சி கடினமாகும் வரை 15 நாட்களுக்கு ஒருமுறை மீண்டும் தெளிக்கவும். சிலந்திப்பேன்கள் மறைந்திருக்கும் இலைகளின் அடிப்பகுதிகளில் கவனமாகத் தெளிக்கவும். தெளிப்பின் முழுமையான பரவலுக்கு, வான்வழித் தெளிப்பைப் பயன்படுத்தாமல், தரைவழி உபகரணங்களைப் பயன்படுத்தவும். எப்போதும் பாதுகாப்பு ஆடைகளை அணியவும் மற்றும் லேபிளில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.
இந்த அறிகுறிகள் லிச்சிப் பழ எரினோஸ் சிலந்திப்பேன் மூலம் ஏற்படுகின்றன, இந்நோய்ப்பூச்சிகள் தாவரச் சாற்றை உறிஞ்சி வாழும் நுண்ணிய சிலந்திப்பேன்கள் ஆகும். காற்றானது, பாதிக்கப்பட்ட மரங்களிலிருந்து ஆரோக்கியமான மரங்களுக்குச் சிலந்திப்பேன்களைக் கொண்டுச் செல்கிறது. கருவிகள், பண்ணை உபகரணங்கள், தொழிலாளர்கள் மற்றும் மரங்களுக்கு இடையில் கொண்டு செல்லப்படும் பாதிக்கப்பட்ட தாவரப் பொருட்கள் மூலமாகவும் இந்தச் சிலந்திப்பேன்கள் பரவக்கூடும். இளம் லிச்சி மரங்கள் (3 ஆண்டுகளுக்கு உட்பட்டவை) சிலந்திப்பேன் தாக்குதல்களால் மிகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியவை. சிலந்திப்பேன்கள் புதிய வளர்ச்சியை விரும்புவதால், முதிர்ந்த மரங்களில் மென்மையான, முதிர்ச்சியடையாத இலைகள் மற்றும் தளிர்களுடன் கூடிய புதிய வளர்ச்சி ஏற்படும்போதும் அவை பாதிக்கப்படலாம்.