பருத்தி

பருத்தியின் ஈர வானிலை கருகல் நோய்

Ascochyta gossypii

பூஞ்சைக்காளான்

சுருக்கமாக

  • வட்ட வடிவ, வெளிர் பழுப்பு அல்லது வெள்ளை நிறப் புள்ளிகள், வித்திலைகள் மற்றும் நாற்றுகள் கீழ்ப்புற இலைகளில் காணப்படும்.
  • முதிர்ந்த இலைகளில் கரும் பழுப்பு நிற ஓரங்களுடன் தோல் நிறப் புள்ளிகளும், தண்டுகளில் நீளமான, கருப்பு அல்லது சாம்பல் நிறச் சொறிகளும் காணப்படும்.
  • மலர்கள் தாக்கப்படுவதில்லை, ஆனால் காய்கள் பாதி வெடித்தும், பஞ்சுகள் நிறம் மாறியும் காணப்படும்.

இதிலும் கூடக் காணப்படும்

1 பயிர்கள்

பருத்தி

அறிகுறிகள்

அஸ்கோகைட்டா கருகல் நோய் பொதுவாக பருவகாலத்தின் ஆரம்பத்தில் ஏற்படுகிறது. இது வித்திலைகள் மற்றும் நாற்றுகள் கீழ்ப்புற இலைகளில் வெவ்வேறு அளவுகளில் காணப்படும் வட்ட வடிவிலான, வெளிர் பழுப்பு அல்லது வெள்ளை நிறப் புள்ளிகள் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இந்தக் காயங்கள் ஒரு கணிசமான அளவை அடையும், மேலும் கருஞ்சிவப்பு-பழுப்பு நிற ஓரங்களையும் கொண்டிருக்கும். பின்னர் நோய்த்தாக்கங்கள் முதிர்ந்த இலைகளில் கரும்பழுப்பு நிற ஓரங்களுடன் தோல் நிறப் புள்ளியாகக் காணப்படும். இந்தக் காயங்கள் இணைந்து, பரந்த தோல் நிறக் கொப்புளங்களை உருவாக்கும். இந்தக் காயங்களின் மையப்பகுதி பின்னர் வெளிர் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில், காகிதம் போன்றாகி, இறுதியாக உதிர்ந்துவிடும். நீளமான, கருப்பு அல்லது சாம்பல் நிறச் சொறி போன்ற காயங்கள் தண்டுகளில் காணப்படும், முக்கியமாகத் தொடர்ச்சியாக பல நாட்கள் மேகமூட்டமான, ஈரப்பதமான வானிலையைத் தொடர்ந்து காணப்படும். இங்கேயும், காயங்களில் சிறிய, கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். காலப்போக்கில், இந்த சொறிக்காயங்கள் உலர்ந்து, தண்டினை வெறுமையாக்கி, தாவரத்தின் நுனிப்பகுதியை அழித்துவிடும். மலர்கள் தாக்கப்படுவதில்லை, ஆனால் காய்கள் பாதி வெடித்தும், பஞ்சுகள் சாம்பல் நிறமாற்றத்துடனும் காணப்படும்.

பரிந்துரைகள்

இயற்கை முறையிலான கட்டுப்பாடு

இதுநாள் வரை, இந்த நோய்க்கு எதிராக எந்த உயிரியல் சிகிச்சையும் கிடைக்கவில்லை. போர்டாக்ஸ் கலவை போன்ற தாமிரம் அடிப்படையிலான பூஞ்சைக்கொல்லிகளை நோய் பரவுவதைக் குறைப்பதற்குப் பயன்படுத்தலாம். இருப்பினும், இது தாவரங்களில் நச்சு போன்ற எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

இரசாயன கட்டுப்பாடு

உயிரியல் சிகிச்சைகள் கிடைக்கப்பெற்றால், தடுப்பு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைந்த அணுகுமுறையை எப்பொழுதும் கருத்தில் கொள்ளுங்கள். விதைப்பிற்கு முன் திரம் அல்லது திரம் + தியாபென்டஸோல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட விதைப் பூச்சுக்களைக் கொண்டு விதைகளுக்கு சிகிச்சை அளிக்கலாம். குளோரோதலோனில் அடிப்படையிலான தடுப்புமிகு இலைத்திரள் பூஞ்சைக்கொல்லிகளை, குறிப்பாக எளிதில் பாதிக்கக்கூடிய வகைகளை பயிர் செய்யும்போது, பயன்படுத்தலாம். நோய் கண்டறிந்தவுடன், முறையான செயல்முறையுடன் இலைத்திரள் பூஞ்சைக் கொல்லிகளைச் சுழற்சி முறையில் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுகிறது (பாஸ்காலிட், மான்கோசெப், பைராக்லோஸ்ட்ரோபின் + ஃப்ளக்சாபைரோக்சாட்). கடுமையான விளைச்சல் இழப்புகளைத் தவிர்ப்பதற்காக வளரும் பருவம் முழுவதும் சிகிச்சைகள் பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும்.

இது எதனால் ஏற்படுகிறது

அஸ்கோகைட்டா கருகல் நோய் அதிகளவில் பருத்தி உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகிறது, மேலும் இது அஸ்கோகைட்டா காசிப்பி என்னும் பூஞ்சையினால் ஏற்படுகிறது. இது தாவரக் குப்பைகளில் பல ஆண்டுகளுக்குச் செயலற்ற நிலையில் இருக்கும், மேலும் சாதகமான சூழ்நிலைகளின் கீழ், பின்னர் இது காற்று மற்றும் மழைத்துளி மூலம் பரவுகிறது, சிலநேரங்களில் பல கிலோமீட்டர்கள் வரை இவை பரவக்கூடும். குளிர்ந்த, மேகமூட்டமான, மழைபொழியக்கூடிய வானிலை, அதிக ஈரப்பதம், காலைப்பனி மற்றும் நீடித்த இலை ஈரப்பதம் (2 மணிநேரம் அல்லது அதற்கு மேற்பட்டவை) நோய் பரவுவதை ஆதரிக்கின்றன, குறிப்பாகத் தாவர வளர்ச்சி நிலையின் ஆரம்பக் கட்டங்களில் ஆதரிக்கின்றன. பூஞ்சையானது பரந்த அளவிலான வெப்பநிலையில் வளரக்கூடியது (5-30 டிகிரி செல்சியஸ்), ஆனால் இவற்றின் உகந்த வளர்ச்சிக்கான வெப்பநிலை, 15-25 ° செல்சியஸ் ஆகும். சூழ்நிலைகள் சாதகமாக இருந்தால், வளரும் பருவத்தில் தொற்றுநோயின் பல சுழற்சிகள் ஏற்படக்கூடும். விளைச்சல் இழப்புகள் அரிதாகவே கூறப்படுகிறது, ஆனால் சாதகமான சூழ்நிலையில் விளைச்சல் இழப்புகள் ஏற்படுவது சாத்தியமாகும்.


தடுப்பு முறைகள்

  • நெகிழ்வுத்தன்மை அதிகம் கொண்ட வகைகள் கிடைக்கும்பட்சத்தில் அவற்றைத் தேர்வு செய்யவும்.
  • சான்றளிக்கப்பட்ட நோய் இல்லாத விதைப்புப் பொருளைப் பயன்படுத்தவும்.
  • மாற்றாக, ஆரோக்கியமான வயலின் விதைகளைப் பயன்படுத்தவும்.
  • அடர்த்தியான கவிகைகளைத் தவிர்க்க, விதை விகிதங்கள் குறித்த பரிந்துரைகளைப் பின்பற்றவும்.
  • நோயின் மோசமான விளைவைத் தவிர்க்க, தாமதமாக நடவு செய்யவும்.
  • நோய்க்கான அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என வயல்களைக் கண்காணிக்கவும்.
  • வயல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நோயுற்றத் தாவரங்கள், தானே வளரும் தாவரங்கள் மற்றும் களைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தவும்.
  • சுகாதாரமான வேளாண் நடைமுறைகளை மேற்கொள்ளவும், உதாரணமாக காலணிகள், துணிகளை அலசுதல் மற்றும் உபகரணங்களைச் சுத்தம் செய்தல்.
  • அதிகப்படியாக நீர்பாய்ச்சுதல் மற்றும் மேல்நிலை நீர்ப்பாசனத்தைத் தவிர்க்கவும்.
  • இலை மேற்பரப்புகள் ஈரமாக இருக்கும் போது வயல்வெளியில் பணி செய்வதைத் தவிர்க்கவும்.
  • விளைச்சலில் மிக மோசமான விளைவுகளைத் தவிர்க்க முடிந்தவரை சீக்கிரம் அறுவடை செய்யவும்.
  • அடுத்த பருவத்தில் பூஞ்சைகள் பரவுவதைக் குறைப்பதற்கு மண்ணை ஆழமாக உழுது கழிவுகளைப் புதைக்கவும்.
  • மாற்றாக அவற்றை அகற்றி, எரித்து அழித்துவிடவும்.
  • எளிதில் பாதிக்காத தாவரங்களைக் கொண்டு 2-3 வருட பயிர்ச் சுழற்சியை மேற்கொள்ளவும்.

பிளான்டிக்ஸை பதிவிறக்கம் செய்க