பராமரிப்பு
வெங்காயம் ஒரு கடினமான குளிர்-பருவ ஈராண்டுத்தாவரமாகும், ஆனால் இவை வழக்கமாக ஓராண்டு பயிராக வளர்க்கப்படுகின்றன. இவை வழக்கமாக வசந்த காலத்தின் துவக்கத்தில் நடவு செய்யப்படுகின்றன, மேலும் அவற்றின் உச்சிப்பகுதிகள் கருகத் தொடங்கியப்பிறகு இலையுதிர்காலத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. இவை பல்வேறு வடிவங்கள், அளவுகள் மற்றும் நிறங்களில் விளைகின்றன. வெங்காயக் குமிழ்த்தண்டுகளில் இருந்து இவை சிறந்த முறையில் பயிரிடப்படுகின்றன, இவை உறைபனி பாதிப்புக்கு ஆளாகின்ற விதைகள் அல்லது நாற்றுகள் மூலம் நடவு செய்வதை விட அதிக வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளன.
மண்
வெற்றிகரமான வெங்காயச் சாகுபடிக்கு சிறந்த மண்ணானது நல்ல வடிகால், ஈரப்பதத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் மற்றும் போதுமான கரிமப் பொருட்கள் உடைய ஆழமான, உதிரியான பசளை மற்றும் வண்டல் மண் ஆகும். எந்த வகை மண்ணாக இருந்தாலும் உகந்த ஹைட்ரஜன் அயனிச்செறிவு வரம்பு, 6.0 முதல் 7.5 வரை ஆகும், ஆனால் வெங்காயத்தை இலேசான காரத்தன்மை உடைய மண்ணிலும் வளர்க்கலாம். இவற்றுக்கு ஏராளமான சூரிய ஒளி மற்றும் வடிகால் தேவை. வெங்காயச் செடிகளை உயரமான படுகைகள் அல்லது குறைந்தது 4 அங்குல உயரத்திலான மணல் மேடு வரிசைகளில் வளர்க்கலாம்.
தட்பவெட்பநிலை
வெங்காயம் மிதமான தட்பவெப்ப நிலையில் வளரக்கூடிய ஒரு பயிர், ஆனால் மிதமான தட்பவெப்பம், வெப்பமண்டல மற்றும் மித வெப்பமண்டல காலநிலை போன்ற பல்வேறு விதமான காலநிலைகளிலும் இதனை வளர்க்கலாம். குளிர் மற்றும் வெப்பம் மற்றும் அதிக மழைப்பொழிவு இல்லாத இலேசான வானிலையில் சிறந்த விளைச்சளைப் பெற முடியும், இருப்பினும், வெங்காயம் உறைபனி வெப்பநிலையைத் தாங்கக்கூடிய பயிர். நல்ல வளர்ச்சிக்கு சுமார் 70% ஈரப்பதம் தேவைப்படுகிறது. மழைக்காலத்தில் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 650-750 மி.மீ. பரவலாக பொழியக்கூடிய இடங்களில் இது நன்றாக வளரக்கூடியது. வெங்காயப் பயிர்களுக்கு வளரும் பருவத்தில் குறைவான வெப்பநிலை மற்றும் கம்மியான பகல் வெளிச்சம் (ஒளிச்சேர்க்கை) தேவை, அதே நேரத்தில் குமிழ்த்தண்டு வளர்ச்சி பெறும்போதும், முதிர்ச்சி அடையும்போதும் இவற்றுக்கு அதிக வெப்பநிலை மற்றும் நீண்ட நேர வெளிச்சம் தேவை.